அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.

 
ரவணைப்பில் அன்னைக்கு நிகர் யாரும் இல்லைதான்.ஆனால், தனது வாழ்க்கையைத் தியாகம் செய்து பிறருக்கு அன்னையாகும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கணவன், குழந்தை, குடும்பம் என்று வாழ்வதையே பெரும்பாலான மகளிர் வாழ்வின் இலக்காய் எண்ணும் உலகில், யார் பெற்ற குழந்தைகளையோ, யார் யாரின் பெற்றோர்களையோ தமது சொந்தமாக பாவித்து அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.
காசேதான் கடவுள் என்று நம்பும் உலகில் ஆதரவற்று தனித்து விடப்பட்ட குழந்தைகள், முதியவர்கள் என அனைவரின் மனதிலும் எதிர்காலம் என்ற ஒன்று அவர்களுக்கு உண்டு என்று அவர்களை நம்ப வைத்தவர் இந்த கலாராணி.
செல்லும் திசைதெரியாமல் இருந்த இவர்களின் முகத்திலும், மனதிலும் ஆனந்தத்தையும், நிம்மதியையும் ஒருங்கே அளிக்க கலாராணி விதைத்த விதைதான் 'விதை' என்ற சேவை அமைப்பு.
தனி மனிதராய் பிறருக்கு உதவுவதே பெரும் சுமையாய்க் கருதிடும் இக்காலகட்டத்தில் பலரையும் பராமரிக்க இவர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
கலாராணி போன்றோர்க்கு வாழ்க்கையில் பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை…ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு தருவதைத் தவிர. ஆரவாரமற்ற சேவையால் சமுதாயம் என்ற சிலையை செதுக்கும் கலாராணி ஒரு சமுதாயச் சிற்பியே.