திருப்பூரில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை

   திருப்பூர் கொடிக்கம்பம் அருகில் உள்ள என்.ஆர்.கே. புரம் பகுதியை சேர்ந்தவர் காட்டன் முத்து (வயது 60). இவர் திருப்பூர் மாநகராட்சியின் 22-வது வார்டு கவுன்சிலராக பணியாற்றி வந்தார். அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். வழக்கம் போல் காட்டன் முத்து நேற்று இரவு தனது வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் காட்டன் முத்துவின் கழுத்தில் ஓங்கி வெட்டினர்.  ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இன்று காலை காட்டன் முத்துவின் மனைவி சுப்புலட்சுமி கதவை திறந்து கொண்டு வெளியே வந்த போது தான் காட்டன் முத்து படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. `என் கணவரை கொன்று விட்டார்களே' என்று கதறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர்  காட்டன் முத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட காட்டன் முத்து 3 முறை கவுன்சிலராக இருந்துள்ளார். அவருக்கு சித்ரா, காந்திமதி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

காட்டன் முத்து கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். காட்டன் முத்து கொலைக்கான காரணம் தெரியவில்லை. அரசியலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை யாராவது தீர்த்துக்கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

-இணைய செய்தியாளர் - s.குருஜி