ஈரோடு Erode
கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை
கொசுக்களை விரட்ட நாம் என்ன செய்வோம்? hit அல்லது beygon spray உபயோகிப்போம் இல்லாவிடில் allout liquid, goodknight liquid அப்படி எதாவது ஒரு இரசாயனப் பொருட்களை உபயோகிப்போம்.
எங்களிடம் உள்ள இயற்கைப் பொருட்களை வைச்சு எதாவது உபயோகப்படுத்தி இருக்கிறோமா? பதில் கூடுதலாக இல்லை என்றே வரும். இயற்கைப் பொருள்களை உபயோகித்தால் கெளரவக் குறைச்சல் எனற நினைப்பு அதிகமாகியுள்ளது கவலைக்குரியது. அதனால் இயற்கை பற்றி காலங்காலமாக நம் மூதாதையர் அறிந்து வைத்துள்ள அறிவை வரும் சந்ததிகள் இழக்கும் அபாயமும், செயற்கைப் பொருட்களால் ஏற்படும் பல தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் அருகிச் செல்கின்றது.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் M.Phil., படிக்கின்ற மாணவி கிருஷ்ணவேணிசில மாதங்களா கொசுக்களை விரட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஈரோட்டில் 2012ல் நடந்த இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதலாவது பரிசை வென்றார்.
இதைத் தமிழ்நாட்டில் எந்த மீடியாக்களும் சிறு செய்தியாகக்கூட வெளியிடவில்லை. நாமாவது இதை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் நண்பர்களே.
-பசுமைநாயகன்
அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.
அரவணைப்பில் அன்னைக்கு நிகர் யாரும் இல்லைதான்.ஆனால், தனது வாழ்க்கையைத் தியாகம் செய்து பிறருக்கு அன்னையாகும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கணவன், குழந்தை, குடும்பம் என்று வாழ்வதையே பெரும்பாலான மகளிர் வாழ்வின் இலக்காய் எண்ணும் உலகில், யார் பெற்ற குழந்தைகளையோ, யார் யாரின் பெற்றோர்களையோ தமது சொந்தமாக பாவித்து அரவணைப்பதையே வாழ்வாய் கொண்டுள்ளவர் கலாராணி.
காசேதான் கடவுள் என்று நம்பும் உலகில் ஆதரவற்று தனித்து விடப்பட்ட குழந்தைகள், முதியவர்கள் என அனைவரின் மனதிலும் எதிர்காலம் என்ற ஒன்று அவர்களுக்கு உண்டு என்று அவர்களை நம்ப வைத்தவர் இந்த கலாராணி.
செல்லும் திசைதெரியாமல் இருந்த இவர்களின் முகத்திலும், மனதிலும் ஆனந்தத்தையும், நிம்மதியையும் ஒருங்கே அளிக்க கலாராணி விதைத்த விதைதான் 'விதை' என்ற சேவை அமைப்பு.
தனி மனிதராய் பிறருக்கு உதவுவதே பெரும் சுமையாய்க் கருதிடும் இக்காலகட்டத்தில் பலரையும் பராமரிக்க இவர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
கலாராணி போன்றோர்க்கு வாழ்க்கையில் பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை…ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு தருவதைத் தவிர. ஆரவாரமற்ற சேவையால் சமுதாயம் என்ற சிலையை செதுக்கும் கலாராணி ஒரு சமுதாயச் சிற்பியே.
இலவச கட்டாய கல்விச் சட்டம் முழுமையாகநடைமுறைப்படுத்தப்படுகிறதா
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – ஔவையார்
கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளது நமது வரலாறும், பாரம்பரியமும்.
இதற்காகவே, இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் முழுமையாகநடைமுறைப்படுத்தப்படுகிறதா.
கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டாய கல்விச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்படி, அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர், எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், அரவாணிகள், கணவனால் கைவிடப்பட்ட மகளிர் ஆகியோரின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதற்கான கல்வி செல்வை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தங்களது குழந்தைகளை சேர்க்க பள்ளி நிர்வாகத்தினர் மறுப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தன் குழந்தையை பள்ளியில் சேர்க்க 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை இதுவரை அணுகியும் முறையாக எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் பதிலளிக்கவில்லை என்றும் இதனால் தங்கள் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள். அரசின் அறிவிப்பாணைகளை செயல்படுத்த நிர்பந்திக்காத கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கையும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய கல்வி அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கானல் நீராகும் கல்விக் கனவுகள்...
அரசின் அறிவிப்பானைகளை செயல்படுத்தாமல் உள்ள பள்ளி நிர்வாகங்களால், ஏழை மாணவர்களின் கல்வி கனவுகள் கானல் நீராக மாறி வருவதாக சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருமாவளவனுடன் சமாதானம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சமாதானப் பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தல் பேசிய ராமதாஸ், சாதியை ஒழிக்க கலப்புத் திருமணங்கள் ஒன்றே வழி என்று தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இத்தகைய பிரசாரங்களை குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி
ஈரோடு அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 5 பேர் பலி
ஈரோடு அருகே அரசு பேருந்து மீது சரக்கு வேன் மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. சித்தோடு அருகே தனியார் கல்லூரி ஒன்றின் சந்திப்பில் பேருந்து மீது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 15 பேர், ஈரோடு மற்றும் பவானியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர், ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-பசுமை நாயகன்
Subscribe to:
Posts (Atom)